Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

Archive for திசெம்பர், 2007

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Posted by kalyanakamala மேல் திசெம்பர் 30, 2007

பூப்போல விரியப்போகும் புத்தாண்டில்

காப்போம் ,வளர்ப்போம், கனிவுடனே

ஒரு க‌ருத்தான‌ வ‌லைப்ப‌திவுத் தோட்டத்தை!

வலிவான  எண்ணங்களை க‌னிவான நிறம் தொட்டு

பொலிவான நம் பூந்தோட்டங்களிலே, பூப்பூவாய்

மலர வைப்போம்!

ரோஜாவும்,மல்லிகையும் ,முல்லையும் போல‌

அன்பும், நட்பும் ,புன்னகையையுமே

முன்பாக வைத்து முன்னேறுவோம்.

வலைப்ப்ரிவு அன்பர்கள், நண்பர்கள் நலம் வேண்டி

வையகத்து நலனைத் தரும்படி வணங்குவோம்

வருகின்ற இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டில்!

Advertisements

Posted in கவிதை, Uncategorized | 3 Comments »

ஆகாய‌த்தில் சினேக‌ம்!

Posted by kalyanakamala மேல் திசெம்பர் 20, 2007

ஒருமுறை துபாய் ஏர்போர்ட்டில் நான் இந்தியா திரும்புவதற்காக விமானம் ஏறுவதற்காக நடந்து வந்து கொன்டிருந்தேன். துபாய் ஏர்போர்ட்டில் அதிக தூரம் நடக்க வேண்டியிருக்கும். தனியாகத் தாயகம் திரும்பிக்கொன்டிருந்தேன். கையில் ஒரு சிறுபெட்டி ஒன்று வைத்துக்கொன்டு நடந்து கொன்டிருந்தேன். நான் துபாய் போகும் போது இருந்த ஏர்போர்ட்டை விட வரும்போது இருந்த ஏர்போர்ட் மிகவும் பெரிதாகிப்போன நேரம். வழியெங்கும் ஃப்ளோர் எஸ்கலேடர்கள் இருந்தன. கையில் பெட்டியுடன் அதில் கால் வைப்பது என்பது எனக்கு கடினமாயிருந்தது. யாரும் தெரிந்தவர்க‌ள் பக்கத்தில் இல்லாததால் பயமாகவும் இருந்தது . நான் கொஞ்சம் தயங்கி நின்றபோது ஒரு வெள்ளைக்கார இளைஞன் (என் மகன் வயது இருக்கும்)என் கையைப்பிடித்து சட்டென்று எஸ்கலேடர் மீது என் காலை வைக்கும்படி செய்து விட்டான். பின் என்னைப் பார்த்து ஒரு நட்புச்சிரிப்பு சிரித்தான். அது தான் மனிதம் என்பது. உலகம் முழுவதும் மனிதர்கள் அமைதியாகவும் அன்புடனுமே இருக்க ஆசைப்படுகிறார்கள்.

        இன்னொரு முறை சிங்கப்பூர் ஏர்போர்டில் நான் சிங்கப்பூருக்குள் சென்று கொன்டிருக்கிறேன். எதிரில் இன்னொரு நம் தமிழ் நாட்டுப் பெண்மணிதான் வந்து கொன்டிருந்தார். முன்பின் தெரியாதவர். என்னைப் பார்த்ததும் கையசைத்து தன் நட்பைதெரிவிக்கிறார்.அருகே வந்து அவர் என்னைப் பார்த்து என்ன சென்னையா? என்று தமிழில் வினவுகிறார். நான் இல்லை நான் சிங்கப்பூருக்குள் போகிறேன் என்கிறேன். அவர் நான் அமெரிக்காவிலிருந்து வந்து கொண்டிருக்கிறேன் என்று ரொம்ப பழகினவரைப் போல பெருமிததத்துடன் பேசிச் சிரிக்கிறார்.பல மாதங்கள் கழித்துத்த தாயகம் திரும்பும் மகிழ்ச்சியுடனிருக்கும் அவரும் நானும் நிற்கிறோம்,சில வார்த்தை பரிமாற்றங்கள் நடக்கிறது. நாங்கள் ஒருவரையொருவர் கடந்து போன பின் எங்களுக்கு எந்த தொடர்பும் இருக்கப் போவதில்லை. மீன்டும் எங்காவது சந்தித்தால்கூட அடையாளம் தெரியப்போவதில்லை.ஆனால் அந்த சில நிமிடங்களில் அவர் என்னை நம் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் கிட்டத்தட்ட ஒரு சகோதரி போல நினைப்பது என்னவோ உண்மைதான்.
இப்படியெல்லாம் முகம் தெரியாதவர்களுடன் பேசாதீர்கள் என்று பல முறை எச்சரிக்கப்பட்டிருந்தாலும் மற்ற்வர் பேசும்போது முகத்தைத் திருப்பிக்கொள்ளவா முடியும்?
ஒரு முறை ஆஸ்திரேலியாவிலிருந்து நான் (இப்பவும் தனியாக)சிங்கப்புர் வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பிளேனில் பயணித்துக்கொண்டிருக்கிறேன். பக்கத்து இருக்கையில் ஒரு ஐரோப்பியர் அமர்ந்து வருகிறார்.சுமார் எட்டு மணி நேரத்துக்கும் மேல் இருவரும் எந்த நிறுத்தமும் இல்லாமல் அருகருகே உட்கார்ந்து வருகிறோம். முதல் இரன்டு மணி நேரம் ஒன்றுமே பேசாமல் பயணிக்கிறோம். நான் என் இருக்கையிலிருந்து எழுந்து நடக்க வெண்டுமென்றால் அவரைத் தாண்டிதான் செல்லவேண்டும். சாப்பாடு வருகிறது.சாப்பிடுகிறோம்.
ஒரு கட்டத்தில் அவர் ஏதோ என்னைக் கேட்க முயல்கிறார் ஆனால் அது எனக்குப்புரியவில்லை. நான் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று கேட்கிறேன் ஆங்கிலத்தில். ஆங்கிலம் எனக்குத்தெரியாது(english no) என்கிறார்.
எப்படியோ என் கேள்வியை புரிய வைத்து அவர் berlin என்று சொல்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.  நீ….. என்பது போல அவர் கையைக்காட்ட  நான் இந்தியா சென்னை என்கிறேன். அவர் தனக்கு இந்தியாவையும் சென்னையையும் தெரியாது என்பது போல தோளைக் குலுக்குகிறார். ஆனால் உலகம் முழுக்க பல இடங்களைச் சொல்லி அங்கெல்லாம் போய்க் கொன்டிருப்பதாகக் கூறுகிறார்.எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு berlin தெரிகிறது. ஆனால் அவருக்கு இந்தியாவைத் தெரியவில்லையே என்று. ஆனால் பயணம் முழுக்க நட்புப்புன்னகை அவர் முகத்தில் மாறவேயில்லை மற்றபடி திரும்பவும் பழய கதைதான் சிங்கப்பூர் ஏர்போர்ட் வந்தவுடன் அவர் ஒரு (terminal)திசையில் சென்றார். நான் வெறு( terminal)திசையில் சென்றேன்.
ஒருமுறை இதேபோல‌ சிஙப்பூரிலிருந்து சென்னை வந்து கொண்டிருக்கிறேன். ப‌க்க‌த்தில் ஒரு த‌மிழ்ப் பெண்ம‌ணி ப‌ய‌ண‌ம் முழுவ‌தும் ந‌ம் நாட்டைப்ப‌ற்றி மிக‌ தாழ்வாகப் பேசிய‌ப‌டி வந்தார். விமான‌ம் த‌ரையைத் தொட்ட‌தும் என்ன‌ சென்னை மிக‌வும் அழுக்காக‌ இருக்கிற‌தே , நான்  சென்னை வந்து நாலு வ‌ருட‌ம் ஆகி விட்ட‌து,ம‌றுப‌டி இப்போதுதான் வ‌ருகிறேன் என்றார்.என‌க்கு ல‌க்கேஜ் கொஞ்ச‌ம் அதிக‌ம் உள்ள‌து நீங்க‌ள் அட்ஜ‌ஸ்ட் செய்து த‌ருகிறீர்க‌ளா என்றார். நான் விமான‌த்திலிருந்து இற‌ங்கி என் ல‌க்கெஜ்க‌ளை சேக‌ரித்துக்கொண்டு ஓட்ட‌ம் பிடித்தேன்!
இப்ப‌டியெல்ல‌ம் ப‌ய‌ண‌ங்க‌ளில் ப‌ல‌வ‌கை அனுப‌வ‌ங்க‌ள் இருக்கும்.யாரிட‌மும் ந‌ம‌து முழு முக‌வ‌ரியையும் கொடுப்ப‌தில்லை.ஆனால் மிக‌ நெருங்கிய‌ சினேகித‌ர்க‌ள் போல‌ ப‌ழகிப் பேசிவிட்டு ந‌டையைக் கட்டுவ‌து ஒரு வினோத‌மான‌ அனுப‌வ‌ம்.

Posted in Uncategorized | 7 Comments »

ச்சீ…..என்ன மனுஷன் இவன் !

Posted by kalyanakamala மேல் திசெம்பர் 18, 2007

ராம் குமாரின் முகத்தைப்பர்க்கவே பிடிக்கவில்லை கவிதாவுக்கு!சீ…இவனெல்லாம் என்ன மனுஷன் எப்பிடி இவன் மட்டும் இப்படி இருக்கான்? பணத்தைத் தண்ணிராக செலவழித்துக் கொன்டு, என்னை மட்டும் எப்பவும் கண்காணித்துக் கொன்டு…..
மனசே வெறுத்துப்பொயிருந்தது.சாப்பிட்ட பிளேட்டைக்கூட எடுத்துப்போடமாட்டான்.காப்பி டம்ப்ளர் மேசை மேல கிடக்கும். கொஞ்ச‌ம் கூட மத்தவங்க கஷ்டம் புரியாம எப்பிடி வளர்ந்திருக்கான்? கோவம் வந்தா எப்பிடிக் கத்தறான். நான் நினைச்ச கணவன் வேற. கிடைச்சது வேற.இனிமேல் சொல்லி திருத்தற வயசா இது?

இப்படி ஒருவனைக் கணவன்னு இந்த காலத்தில நினைக்கிற‌த்துக்கே கஷ்டமாயிருந்ததது.
எப்படியெல்லம் தன்னோட பிரன்ட்ஸ் எல்லாம் சுதந்திரமா இருக்காங்கன்னு நினைச்சுப்  பார்க்கவே மனது கனத்தது.அடாவடியெல்லாம் பண்ணற பெண்களையெல்லாம் அவங்க ஹஸ்பென்ட்ஸ் எல்லாம் நல்லா வெச்சுக்கிறாங்க. என்ன மாதிரி ஒரு நல்ல பெண் கிடைச்ச இவனால் எப்பிடி இந்த மாதிரி நடக்க முடிகிறது? ஒவ்வொரு நாளும் யுகமாக்கழிகிறது……

யோசிச்சு யோசிச்சு மனதும் உடம்பும் ரொம்ப சோர்வாயிருந்தது.இனிமே இவனோட வாழறதே ரொம்ப கஷ்டம்னு தோன்றியது.

படிப்பு இருக்கு, வேலை இருக்கு,மனசுல தைரியம் இருக்கு .இனிமே இப்ப்டி வாழ முடியாது……….  நானும் நாலு மாதமாகப் பார்க்கிறேன் சர்வாதிகாரி மாதிரின்னா நடந்துக்கிறான்.முடிவுக்கு வந்து விட்டது போல கொஞ்சம் துணிகளைமட்டும் எடுத்துக்கொண்டு அம்மா வீட்டுக்குப்போய் விடலாம்னு யொசனை செய்து
கிளம்பினாள்.பாவம் அம்மா நான் இவனோட சந்தோஷமாயில்லைன்னு நினைச்சாலே கஷ்டப்படுவாள். அப்பாவோ எப்பவும் என்னடா செல்லம்ன்னுதான் பேசவே ஆரம்பிப்பார்.கொஞ்சம் கொஞ்சமாக சொல்லிக்கொள்ளலாம். முதலில் இந்த வாழ்க்கைக்கு ஒரு முடிவு கட்டணும் என்று மட்டும்தான் தோணறது…….புறப்பட்ட அவளை போன் கால் நிறுதியது.இவனாத்தான் இருக்கும்..மஹா போர். என்ன செய்தின்டிருக்கேன்னு கேப்பான். பெரிசா ஆபீசுல என்னமோ கிழிச்ட்டாப்போல ஒரு நினைப்புல பேசுவான் கேட்டுக்கணும்…இவன் சிரிச்சா நானும் இளிச்சுண்டு கேக்கணும். இவன் கொபிச்சுன்டா பொறுத்துக்கணும்…..என்னடா நாய்ப்பொழப்பாக போச்சு………
வெறுப்போட பழக்க தோஷத்துல போனை எடுத்தாள்.
மறு முனையில் அம்மா. கவிதா…..வீட்டுலதானே இருக்க… இருக்கமாட்டியோன்னு நினைச்சென்…பட பட ந்னு வெடித்தாள் அம்மா.இனிமே உன் அப்பாவோட என்னால காலம் தள்ள முடியாதுடீ…..ரொம்ப தொல்லை தாங்கல்ல…ஏதோ ஆபீசுன்னு ஒண்ணு போயின்டிருந்தாரோ பிழைச்சமோ ……இல்லாட்டா எப்பவோ தற்கொலை பண்ணிச் செத்திருக்க வெண்டியதுதான். வீட்டுலைருந்தாலும் ஒரே தொல்லை …..இத சரியா வை அதை கிளீன் பண்ணுன்னு.வெளியே போனா வீட்டையே மறந்துடறார்……..போகிற இடம் வர இடம் எதையும் சொல்லறதில்ல..எங்க போனார்னு தெரியல்லெ இப்போ …இவருக்கு இவர் ஆபீச விட்டா வெற சப்ஜெட்டே தெரியல்லடீ.ரொம்ப கஷ்டமாயிருக்கு…எனக்குமெங்கவாவது கொஞ்சம் போனாத்தான் சேஞ்சாக இருகும்ன்னு தொணரது. இல்லாட்டிப் பயித்தியம் பிடிச்சும் போல இருக்கு.இவ்வளவு காலம் எப்பிடி போச்சுங்கறத விட இனிமே காலம் எப்பிடிப் போகப் போறதுன்னு பயமாக இருக்கு நேத்து பாரு டிரைவரோட சண்டை போட்டு அவனையும் தொரத்திட்டார்…………அம்மா பேசிக்கொன்டிருந்தாள்.
கவிதா காதுல எதுவுமே விழ வில்லை….

Posted in Uncategorized | 6 Comments »

சிறுவர் வதைச்சட்டம்!

Posted by kalyanakamala மேல் திசெம்பர் 15, 2007

இன்றுகாலை பத்து மணியளவில் கழைக்கூத்தாடி(கலைக்குத்தாடி)குடும்பம் ஒன்று வித்தைகள் காட்டிக் கொன்டிருந்தது. சாலையோரம் ஒரு நல்ல தொல்லையில்லாத இடமாகத் தேர்வுசெய்து தங்கள் வித்தைகளைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு பெண்மணி, ஒரு ஆடவன் இரண்டு குழந்தைகள்  கொண்ட குடும்பம். பெண் தன் கைக்குழந்தையுடன அமர்ந்திருந்தாள். ஆட‌வ‌ன் கையில் மேள‌ம் போன்ற‌ ஒரு வாத்தியத்தைத்‌ த‌ட்டி வாசித்துக்கொண்டிருக்க ஒரு சின்ன‌ ஆறு அல்ல‌து ஏழு வ‌ய‌துடைய‌ சிறுமி க‌யிற்றின் மேல் அந்த தாளத்துக்கேத்தபடி நான் பார்த்த‌வ‌ரை சுமார் அறை ம‌ணி நேர‌ம் கையில் ஒரு க‌ம்பு வைத்துக்கொண்டு balance செய்து ஆடிக்கொண்டிருந்தாள். அவ‌ள் வித‌வித‌‌மாக‌ சாக‌ச‌ங்கள் செய்துகொண்டிருந்தாள்.விய‌த்த‌கு முறையில் க‌யிற்றின் மேல் மெல்லிய‌தாக‌ இருந்த அவள் ஆடிக்கொன்டிருந்தாள்.
சுற்றி இருப்போர் யாரும் அந்த‌‌ சாக‌ச‌த்தை ஒரு கேளிக்கையாகப் பார்க்காம‌ல் ப‌ரிதாப‌த்தோடுதான் பார்க்க‌ முடிந்த‌து.எல்லோர் முக‌த்திலும் ப‌ரிதாப‌ம்தான் மேலொங்கியிருந்தது.
அந்தப் பெண் அந்த குறிப்பிட்ட‌ வித்தயைச் செய்ய வேண்டுமானால் மெலிந்தே இருக்கவெண்டும். கொஞ்சம் கூட எடை அதிகரித்தால் அந்த வித்தையைச் செய்ய முடியாது என்று தோன்றியது. ஏற்கெனவே அந்தப்பெண் வறுமையில்தான் உழலவெண்டும் . இந்த குறிப்பிட்ட வித்தையைச் செய்ய இன்னும் உணவுக்கட்டுப்பாடு கொண்டிருக்கவேண்டுமோ என்று என் மனம் அந்த சிறுமிக்காகக் கவலைப்பட்டது.‌
இந்த‌‌ மாதிரிக் குழந்தைகளை வதைக்காதீர்கள் என்று அந்த ஆணிடமோ பெண்ணிடமோ போய்ச்சொல்லவேன்டும் என்று மனமும் வாக்கும் துறுதுறுத்தது.சிறார் கொடுமைகளில் மிகக்கொடுமையாக  இந்த‌‌ குறிப்பிட்ட‌ கொடுமை தோன்றிய‌து.
இந்த‌ மாதிரிக் கொடுமைக‌ளைப் பார்த்தால் என்ன‌ ந‌ட‌வ‌டிக்கை அவ‌ர்க‌ளுக்கு (கெடுத‌ல் செய்யாம‌ல்)எடுக்க‌வெண்டுமென‌ யாருக்காவ‌து ந‌ம‌து வ‌ட்ட‌தில் தெரிந்த்தால் சொல்லுங்க‌ளேன்!

Posted in Uncategorized | 7 Comments »

!கண்ணே பாரதி!

Posted by kalyanakamala மேல் திசெம்பர் 11, 2007

காலம் முன்னோக்கி ஒடுகிறது. நினைவுகள் மட்டும் பின்னோக்கி ஒடுகின்றன!பள்ளிப்பருவமாயிருக்கட்டும் அப்புறம் வளர்ந்த பருவங்களாயிருக்கட்டும் பாரதி என்ற மந்திரச்சொல் என்னை கவர்ந்து இழுக்கும் ஒரு காந்தச் சொல்லாகவே இருந்திருக்கிறது.
எனக்கு அமைந்த பள்ளியும், ஆசிரியர்களும் காரணமா இல்லை எனது மனதை ஈர்க்குமொரு சகாப்தமாக பாரதியின் பாடல்கள் இருந்தது காரணமா என்று சொல்லமுடியாதபடி ஒரு நிலமை.
அப்போவெல்லாம் பள்ளியில் பாரதி பிறந்த தினத்தன்று, பாரதியார் பாடல்களில் அதிக வரிகளை யார் ராகத்தோடு பாடுகிறார்களோ அவர்களுக்குத்தான் பாட்டுப் போட்டிகளில் முதற்பரிசு.
பாரதியைப் பற்றி பேச்சுப்போட்டிகளில் பேசவேன்டும்.தலைப்புகள் பலவிதமயிருக்கும். பாரதியும் கண்ணனும்,பாரதியும் ஒறுமைப்பாடும்,பாரதியும் தமிழும், பாரதியும் நாட்டுப்பற்றும், பாரதியும் சுதந்திரமும், பாரதியும் பெண்ணும் என்றூ.
போட்டிக்கு சில  நிமிடங்களுக்கு முன்தான் தலைப்பு கொடுக்கப்படும். மிகவும் திகிலாயிருக்கும். பேச்சுப்போட்டி என்றாலே எல்லார் கவனமும் என் பக்கம். பாரதி பற்றிப் பேச கசக்குமா என்ன?
பாரதியார் பாடலோடு நான் பேச்சுப்போட்டிக்கு பேச ஆரம்பித்தவுடனேயே என் ஆசிரியர்கள் மற்றும் எனது போட்டிகளில் சேராத கூடப்படிக்கும் மாணவிகளிடம் ஒரு கைதட்டலுடன் கிடைக்கும் ஊக்கம் கலந்த வாழ்த்துக்கள்.
ஆஹா!எவ்வளவு இனிய மாலைப்பொழுதுகள் அவை!
நிமிர்ந்து உட்கார்ந்து தலைமை ஆசிரியரைப் பார்க்கும் தமிழாசிரியரின் பார்வையில் இவள் என் மாணவி என்ற பெருமிதம் தொனிக்கும். நான் இன்னேரம் பாரதியாகவே மாறி”சிந்து நதியின் மிசை நிலவில் சேர நன்னாட்டிளம் பெண்களுடன்”போய்க்கொண்டிருப்பேன்.
கூடவே என் பள்ளியினரையும் அழைத்துப்போகும் தன்மை அந்தப் பாட்டுக்கு இருக்கும்.
      “தொன்று நிகழ்ந்ததனைத்துமுணர்ந்திடும் சூழ் கலைவாணர்களும் “பாரதத்தின் ஆரம்பம்  தெரியாமல் தடுமாறுவார்கள்.கணிரென்ற குரலில் நான் பாடி பாரதி பற்றிப்பேசியதை அந்தப்பள்ளி ரசித்ததை இப்போதும் என் கண்கள் பனித்திட நினைவு கூறுகிறேன்.
         “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்”
அப்பப்பா!என்ன ஒரு தீர்க்க தரிசனம்!மெய் சிலிர்க்கிறது. கண்ணே பாரதி! நீ கண்ட கனவு நினைவாகி விட்டதடா!இனியொரு விதி செய்வோம் என்று நாங்கள் கிளம்பி விட்டோம்.
       காணி நிலம் வேண்டும் என்று பராசக்தியுடன் மல்லுக்கு நின்றாயே! பலகாணி நிலங்களை பெற்று விட்டோம்!  நீ மட்டும் இல்லையென்றால் உன் பாட்டு மட்டும் எங்களுக்குத் தெரியாமல் இருந்திருந்தால் , இவ்வளவு கஷ்டப்பட்டு கிடைத்தது இந்த சுதந்திரம் என்று என் போல சாதரணப்பெண்களுக்குத் தெரியாமலேயே போயிருக்கும்!முண்டாசு கட்டின முனிவனே உனக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.‌

தமிழ்த்தாய் வாழ்துடன் கூட்டம் முடியும்போது பரிசுகள் அறிவிப்பில் கடைசி பஷமாக எனக்கு நான்கு பரிசுகள் இருக்கும்.பரிசுகளைவிட பாரதியின் நினைவுகளைச் சுமப்பது பேரின்பமாக இருக்கும் எனக்கு!இந்த நினைவுகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதே மிகவும்  பெருமையாக இருக்கிறது!வாழ்க பாரதி நாமாம்!வளர்க நம் தமிழ்!

Posted in Uncategorized | 2 Comments »

கண்ணான பாரதிக்குப் பொன்னான வணக்கங்கள்.

Posted by kalyanakamala மேல் திசெம்பர் 11, 2007

பாரதி ஒரு சரித்திரம்!பாரதி ஒரு கடல்!பாரதி ஒரு புயல்!பாரதி ஒரு சமுதாயம்!

ஜாதி ஒழிப்புக்கு ஒரு பாரதி!

சமுதாய ஒருமைபாட்டுக்கு ஒரு மாமனிதன்!

பெண் உயர்வுக்கு ஒரு புண்ணிவான்!

தமிழுக்கு ஒரு புலவன்!

தமிழகம் இந்தியாவுக்கு தந்த தங்கமைந்தன் பாரதி.

இலக்கியத்தில் ஒரு இளவல்,

ஆக மொத்தம் பாரதி ஒரு சகாப்தம்!

Posted in Uncategorized | 3 Comments »