Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

உன்னைச்சொல்லிக் குற்றமில்லை….

Posted by kalyanakamala மேல் ஜனவரி 9, 2009

சோஃப்பாவில் உட்காருமுன் அனிச்சையாக சுவிட்சைத்தட்டினேன். ஃபான் சுற்ற வில்லை. ரெகுலேட்டரை திருகிப்பார்த்தேன் உஹும் ஃபான் நகரவில்லை. சலிப்புடன் இடம் மாறி மற்றொரு சோஃபாவில் உட்கார்ந்து காப்பி குடித்து விட்டு செருப்பை அணிந்து கொண்டு தெரு முனையிலுள்ள எலெக்ட்ரிகல் ஷாப்பூக்குப் போனேன். ஷாப் உரிமையாளர் புத்தகதிலிருந்து முகத்தைத் திருப்பி என்ன என்பது போலப் பார்த்தார்.
வீட்டுல ஒரு ஃபான் ஓடவில்லை ஒரு எலெக்ட்ரீசியனைக்கொஞ்சம் சீக்கிரம் அனுப்புங்களேன் என்றேன்.சரி அனுப்பறேன்னார்.
சரியாக மாலை 4 மணிக்கு இரண்டு பையன்கள் 17 அல்லது 18 வயதுக்குள்தான் இருக்கும் வந்தார்கள். எலெக்ட்ரிகல் ஷாப்பில் அனுப்பினார் ஃப்பான் ரிப்பேராமே என்று கேட்டார்கள். ஃபானை கை காட்டினேன்.
ஒரு ஸ்டூலைப்போட்டு ஃப்பான் நடுவிலிருந்த குண்டுப் பகுதியைக் ஒருவர் கழட்ட  இன்னொருவர் ஸ்டூலைப் பிடித்தவாறு நின்றிருக்க  ஃப்பான் ரிப்பேர் நடந்தது. ரெகுலேட்டரை சரிபார்த்தார். ஃப்பான் ஒட ஆரம்பித்ததும் என் கணவர் இன்னொருவரிடம் பாத்ரூம் லைட் சுவிட்சை சரிபண்ணச் சொல்ல அவர் பாத்ரூம் பக்கம் போனார். இத்ற்குள் என் வீட்டுக்கு வந்த சொந்தக்காரர் ஒருவர் கிச்சனிலிருந்த என்னிடம் வந்து பையன்கள் வீடு முழுக்க நடமாடுகிறார்கள். செல் ஃபோன்கள் மற்றும் வாட்சுகளாஈப்பத்திரமாக எடுத்து வை. காணாமல் போனால் அப்புறம் கஷ்டமாயிடும் என்றார்.
பையன்கள் வேலை முடித்து ஃப்பான் கண்டென்சருக்கு 75 ரூபாய் சஸ்விட்சுக்கு 15 ருபாய் 30 ரூபாய் லேபர் என்று கணக்கு சொல்லி பணம் வாங்கிக்கொண்டு போனர்கள்.
அவர்கள் போன பின் வாட்சு செல்போன்கள் எல்லாம் பத்திரமாக இருந்தன. அவைகளோடு அவர்கள் விட்டுப்போன ஒரு ஸ்குரூடிரைவரும் கிடைத்தது. மாலை மணி நாலே முக்கால்.ஸ்குருடிடரைவரை எடுத்து மேலும் கீழும் திருப்பிப் பார்த்து விட்டு உறவினர் ஒன்றும் சொல்லாமல் போய் விட்டார்.
மறுநாள் வாசல்மணி  சத்தம்.எலெக்ட்ரீசியன் பையன் //சார் ஸ்குரு டிரைவர் விட்டுட்டுப்போயிட்டேன்.
இங்கதானே சார் விட்டேன்? சாயந்திரமெல்லாம் டென்ஷனாயிட்டேன் சார்//
இங்கதான் இருக்கு. எடுத்துக்கொடுத்தேன்.
// தாங்ஸ் சார்//
போய் விட்டான்.

Advertisements

Posted in Uncategorized | 2 Comments »

சாக்கடை நாற்றம்

Posted by kalyanakamala மேல் திசெம்பர் 5, 2008

மாலை நாலு மணி சுமாருக்கு எங்கள் பகுதியில் உள்ள ஒரு நல்ல தரமான பள்ளியின் பக்கமாக நடந்து போய்க்கொண்டிருந்தேன். பெண்களும், பையன்களும் கூட்டம் கூட்டமாக பேசியபடியும் ,விளையாட்டாக ஓடித் துரத்தியபடியும், ஒருவர் தோள் மேல் மற்றொருவர் கை போட்டுக்கொண்டு நடந்தபடி பேசிக்கொண்டும் மாணவர்களுக்கான தனியான வாழ்க்கைப் பருவத்தை மற்றவர்களை (தங்களுடைய‌தை)அசை போடச்செய்யும் வகையில் சென்று கொண்டிருந்தனர்.

ஒரு திருப்பத்தில் திரும்ப யத்தனித்த போது மிகக்கொடுமையான சாக்கடை வாடை அடித்தது. மாணவர்களும் மற்றவர்களும் அந்த சாக்கடை வாடையால் அருவருப்படைந்து மற்றவர்களையும் எச்சரித்து

//அங்க போகாதீங்க!சாக்கடைத் தண்ணீர் !ஜாக்கிர‌தை!//

என்று குரல் எழுப்பி எச்சரித்தனர்.எல்லொரும் அந்த திருப்பத்தை தவிர்த்து அடுத்த திருப்பத்தை நோக்கி நடக்க யத்தனித போது ஒரு சிறுவன் அங்கு வேலை செய்யும் மாந‌கராட்சி துப்புரவுத் தொழிலாளர் அந்த சாகடையைச் சீர் செய்யும் பணியில் ஈடு பட்டிருப்பதைப் பார்த்து

//பாவம்டா அந்த தொழிலாளி நாம் எல்லாம் அந்தப்பக்கம் போவதையே தவிர்க்கிறோம். வாடை தாங்கலை ஆனால் அந்ததொழிலாளி அதற்குள் இறங்கி எப்படி வேலை செய்யறார்//

என்று பரிதாபப்பட்டான்.

அந்த சிறுவனுக்கு பத்து வயது இருக்கும். அப்படி முன் பின் தெரியாத மற்றவருக்காக இரக்கப்படும் மனது கொஞ்சம் வயதானால் எப்படி மறைகிறது. ஆணாதிக்கம் என்ற எப்படி நுழைகிறது. எப்படி ?எப்படி?
எப்படி என்று எழும் என் கேள்விக்கு எனக்கு பல ப‌தில்கள் கிடைத்தாலும் மனம் கொஞ்சம் தடுமாறியது என்னவோ உண்மைதான்.

Posted in Uncategorized | 9 Comments »

கல்யாணம் கச்சேரி….

Posted by kalyanakamala மேல் செப்ரெம்பர் 5, 2008

போன வாரம் ஒரு திருமணத்திற்குப் போயிருந்தேன்.மறுநாள் திருமணம்.முதல் நாள் மாலை வரவேற்பு. வரவேற்பு நடந்தது. பின் நிச்சயதார்த்தம் என்ற சடங்கும் நடந்தது.மணப்பெண் மற்றும் மணமகன் இருவரும் மிகவும் நன்றாகப் (PHD)படித்தவர்கள். அவர்களுடன் கூடப் படித்தவர்கள், மற்றும் மணமகளின் தங்கையுடன் வேலை செய்பவர்கள் (தங்கையும் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் நல்ல வேலையில் இருப்பவர்)எல்லொரும் நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் (மிக நாகரீகமாக அல்லது ஃபாஷனாக என்றும் கூறலாம் உடை உடுத்தி யிருந்தவர்கள் நடனமாடத் தொடங்கினார்கள். பின்னணியில் ஒரு சினிமாக் கூத்துப்பாட்டு.

நானும் என் பக்கத்து வீட்டு பெண்மணியும் நாற்காலியைத் திருப்பிப் போட்டுக்கொண்டு நடனத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

கிழவர்கள் முதல் இளையவர்கள் வரை யாரும் அதை விரும்பாததாகத் தோன்ற வில்லை.
நடனம் உச்ச கதியில் போய்க்கொண்டிருந்தது. சிறு வயதுப் பெண்களாதலால் உடை எல்லாம் உயர்செருப்பு, பான்டு, மிக ஃபாஷனான சல்வார் என்ற ரீதியில் இருந்தன.
பாடல்களும் //அப்படிபோடு// டைப்தான்.

கூட்டம் கொஞ்சம் ஈடுபாடுகாட்டியவுடன் நடனம் சுறுசுறுப்பாகியது.

திடீறென்று பின்னாலிருந்து ஒரு பெரியவரின் குரல் எல்லொரும் பயப்படும்படி கேட்டது.
// ந‌ல்லா ஆடுங்கடி! தெருவுல போய் நின்று ஆடுங்க. வெக்கம் மானம் ஒன்றும் இல்லாத கழுதைகளா!இதனால்தான் மழை இல்லை, பஞ்சம் வருது. பெண் பெண்ணாக இல்லாமல் இப்படி ஆடுறிங்களே சுனாமி வரது இதனாலதான்.//என்பது போல வசை மாறிப் பொழிந்தார்.
கூட்டத்திலிருந்தவர்கள் பலர் திருதிரு என்று விழித்தார்கள். சிலர் விக்கித்துப் போயிருந்தார்கள்.சிலர் அப்பவே நினைத்தேன் இதெல்லாம் என்ன கூத்தென்று என்று சொன்னார்கள்.

நான் பக்கத்திலிருந்த என் நண்பியிடம் //இந்தப் பெரியவர் கொஞ்சம் அந்தப் பெண்ணின் தாய் தந்தையரிடம் சொல்லி நடனத்தை நிருத்தச் சொல்லியிருக்கலாமே //என்றேன் .

 ஆனால் அவரோ //நல்ல வேளை நாம் இன்னும் முன்னால் போய் உட்கார்ந்து தாளம் போட்டு ரசிக்காமல் விட்டோமே. அந்தப் பெரியவர் நம்மையும் செர்த்து திட்டியிருப்பார் //என்றார். அவர் சொன்னது எனக்குச் சிரிப்பு வந்தாலும் உண்மை என்று தோன்றியது.

இருவரும் வாயைத் திற‌க்காமல் சாப்பாடு சாப்பிட்டு விட்டு (வீட்டில் சாப்பாடு கிடையாது)வீட்டை நோக்கி நடந்தோம்.
அந்தப்பெண்கள் அந்தக் கூட்டத்தில் தலை குனிந்து நின்ற காட்சி மறக்க முடியாததாக இருந்தது.

Posted in Uncategorized | 16 Comments »

புதிய தலை முறை எப்படி?

Posted by kalyanakamala மேல் செப்ரெம்பர் 3, 2008

ஞாயிறு மற்றும் திங்கள் கிழமை இரன்டு நாட்கள்  எங்க வீட்டுக்கு என் கணவரின் தங்கை வந்திருந்தாங்க.என்னை விட ஒரு ஆறு வயது பெரியவங்க. ஆனால் நல்ல திடமாக இருக்கிறவங்கதான்.
வந்து நுழைந்து நாங்க வரவேற்று அவர்கள் சோஃபாவில் உட்கார்ந்ததும் “எனக்கு ஜலதொஷம் கொஞ்சம் வென்னீர் கொடுத்துட்டு காப்பி கொண்டா’ என்று சொன்னாங்க.
தொடர்ந்து ஃபிலர் காப்பியாக இருக்கட்டும்ன்னாங்க.
 சரின்னு சொல்லிட்டுப் போய் வென்னீர் சூடாக சுட வைத்துக்கொடுத்து விட்டு காப்பி போட்டுக்கொடுத்தேன்.
ஒரு பத்து நிமிஷம் பேசிவிட்டு இரவு உணவு என்னன்னு கேட்டாங்க.
அவங்களே தொடர்ந்து சவுத் பக்கம் வந்ததிலிருந்து ஒரே rice அதிகமயிடுத்து அதனால் ரோட்டி கொஞ்சம் பண்ணிட்டு ஒரு காய் பண்ணிடுனுன்னாங்க. எனக்குக்கொஞ்சம் இது அதிகமாகப்பட்டது.பரவயில்லைன்னு பொறுமையாகச் செய்து போட்டேன். வெறு எதுவுமே அதிகமாக ஈடுபாடுடன் பேசாமல் என்னை ஒரு நிமிடம் கூட உட்கார விடாமல் வேலை வாங்கிகிட்டே இருந்தாங்க.என் கணவரோ அவருடைய கணவரோ இப்படி விடாமல் வேலை வாங்குரையே நல்லா இல்லைன்னு ஒரு வார்த்தை சொல்ல வில்லை.
அப்புறம் சமஹன் வென்னீர்ல போட்டுட்டு வா, வெத்திலப்பாக்கு எடுத்துக் கொடு என்று மேல மேல நான் அவங்க சொல்லறத செய்ய செய்ய ,விடாம இரண்டு நாளும் என்னை ஒரு வினாடிகூட விடாம வேலை வாங்கி இருக்காங்க. நானும் வந்தவங்களை நோக‌ அடிக்கக் கூடாதுன்னு எல்லாவற்றையும் செய்து அவங்களை திருப்தி படுத்தினேன்.
ஆனால் மனதுல ஒரு கேள்வி இளைய தலை முறைப் பெண்களானால் இந்த சூழ்னிலையை எப்படிக் கையாண்டிருப்பார்கள் என்பதுதான். பதில் கிடைக்குமா இந்த வலைப்பக்கத்தில்?

Posted in Uncategorized | 22 Comments »

தந்தை மகள் உறவு நிபந்த‌னைகுட்பட்டதா?

Posted by kalyanakamala மேல் ஜூன் 29, 2008

நேற்றைக்கு ஒரு நண்பரின் மகனுக்காக கோர்ட்டுக்குச் செல்லவெண்டிய நிர்பந்தம். கோர்ட்டுன்னா அந்த ஆணின் திருமணம் மன வேறுபாட்டால் முறிந்து விட்டது. பெண் குழந்தை ஒன்று உண்டு. வயது 7 முடிந்து 8வது வயது நடக்கிறது.
   அந்த ஆண் வெளினாட்டில் பணி புரிபவர். அதனால் அவர் குழந்தையைப் பார்க்க நீதிபதியின் தாற்காலிக ஆணைப்படி அனுமதி பெற்றாலும் பல காரணங்கள் சொல்லி  அதை அந்தப் பெண்மணியின் பக்கத்தினர்  தள்ளுபடி செய்கிறார்கள்.
   இவர் ஒவ்வொரு முறை வெளினாட்டிலிருந்து வந்து 6 அல்லது 7 மாதங்கள் இந்தியாவில் தங்கி மனுப்போட்டு கேஸ் கோர்ட்டில் வந்து வாதிக்கப்பட்டு பல ஹியரிங்குகளுக்குப் பின் சில நாட்கள் அவருடைய மகளைப் பார்க்க அனுமதிக்கப்பட்டு  பின் முழு அனுமதி பெறாமலேயே வெளினாடு கிளம்பும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது.         
   இப்படியே 7 வருடங்கள் போன பின் இப்போது அவருடைய தாய் தந்தையரும் அவருடன் கூடப்பொகும் அனுமதி பெற்றனர்.
ஒரு சப்போர்ட்டுக்காக நானும் போனேன்.
  அந்தக்குழந்தை  தகப்பனைத் திரும்பிக்கூட பார்க்கவில்லை. தாயின் சவால் “உன்னால் முடிந்தால் அவளைத் திரும்பிப்பார்க்க வைத்து பேசு பார்க்கலாம்”என்பது
 அந்த ஆணை வளர்த்த விதம் சரியில்லை என்றும் புகார்.
    குழந்தையைப் போட்டோ எடுத்தால் கையிலிருந்த கேமராவைப் பிடுங்கித் தூர எறிந்து விடுவதாக மிரட்டல். அதையும் மீறி போட்டொ எடுத்தால் குழந்தையை மறைத்துக்கொள்ளுவது கைகளால் பேப்பரால் மற்ற பிற பொருட்கள்களால்.அதையும் மீறி செய்தால் போலீசைக் கூப்பிடுவதாக மிரட்டல்.

வயதில் பெரியவர்களான தாத்தா பாட்டிக்கு துளிகூட மதிப்பு கொடுக்கப்படவில்லை.
    அந்த ஆண் சரியாக வளர்க்கப்படவில்லை ,சரி!இந்தப்பெண் சரியாகச் செயல்படுகிறாளா? தன் குழந்தையை சரியான பாதையில்தான் கொண்டு போகிறார்களா?
    தகப்பனைப் பார்த்து” நீ பெண்ணை மதிக்கக் கற்றுக்கொள்.உன் பெண் உன்னை மதிப்பாள்” என்று அறிவுரை வேறு.
     த‌‌கப்பனைக் கோர்ட்டில் நிறுத்தி மதிக்காமல் நடத்தி த‌ன் மகளுக்கு அந்த்தாய் சொல்லிக் கொடுத்து வள‌ர்க்கும் முறைதான் என்ன? ஆணை மதிக்கக்டாது என்பதுதானே?
இதுதான் பெண் உரிமையா?

 

Posted in Uncategorized | 21 Comments »

உன்னை நேசிக்கும் கூட்டம்………………….

Posted by kalyanakamala மேல் மார்ச் 11, 2008

இன்னைக்குக்காலையில் எழுந்து எதையாவது செய்யவேண்டும் என்று மட்டும் நினைக்கிறோம். திட்டமிடல் என்ற பெயரில்.திட்டமிடும் போது ஒரு மகனாக அல்லது மகளாக,தாயாக அல்லது தந்தையாக,கணவனாக அல்லது மனைவியாக,சகோதரனாக அல்லது சகோதரியாக மட்டுமே என்ன என்ன செய்யலாம் என திட்டமிடுகிறோம்.வேலை செய்யும் இடத்தில் செய்யவேண்டிய பணிகள் நிமித்தம் திட்டமிடவும் செய்கிறொம்.
     என்றைக்காவது ஒரு சிறந்த மனிதனாக நாம் ஒரு நாளைத் திட்டமிட்டால் என்னவெல்லாம் செய்ய முடியும். யார் யாருக்கு என்ன என்ன செய்ய முடியும். எந்தெந்த வகையில் நாம் சிறந்தவன்? அதை நாம் எப்படி உபயொகித்து சில பல சிறந்தது என்று எல்லொராலும் கருதப்படுகிற செயலைச் செய்யமுடியும.
    முன்பு சொன்ன உறவு முறைகளை சந்தோஷப்படுத்த திட்டமிட்டு செயல்கள் செய்து வெற்றி பெற்றாலே போதுமே என்றுதான் பெரும்பாலும் எல்லொருக்கும் தோன்றும்.
    அதையும் தாண்டி சாதிக்கப்பிறந்தவர்கள் சில பல செயல்களைச் செய்கிறார்கள்.அதனால்தான் அவர்களைச் சாதிக்கப்  பிறந்தவர்களாக நினைக்கிறோம். அதற்கு மூலதனம் தன்னம்பிக்கை மற்றும் நேர்மையான உழைப்பு.
     தன்னம்பிக்கை எப்போது வரும்?
     தான் செய்யும் செயல் தீமை விளைவிக்காதது, ந‌ல்ல செயல்தான் என்பதை நாம் முதலில் நம்பவேண்டும்.அந்த செயலைச் செய்யும்போது ஏற்படும் அல்லல்கள் மற்றும் அவதுறுகளைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். நாம் அந்த செயலை அனுபவித்து(விரும்பி)ச்செய்ய வேண்டும்.அதைத்தான் involvement என்கிறார்கள்.

     சில சமயங்களில் நாம் பார்ப்போம் சில தொழில்முனைவோர் (proffessionals)ஒரு வேலையில் அதிகமாக நாட்டம் காட்டுவார்கள் .அந்த வேலை அவர்களுக்கு மற்ற வேலைகளைவிட அதிக பணம் வர வாய்ப்பே இருக்காது. நேரம் அதிகமாகச் வழிக்கவேண்டியிருக்கும்.
  வேலை பளுவும் அதிகமிருக்கும். ஆனாலும் அதைச் செய்ய நினைப்பார்கள் .செய்தும் வெற்றிகரமாக முடிப்பார்கள்.காரணம் அந்த ஈடுபாடும், நியாயமானது என்ற எண்ணமும் ,அந்த எண்ணம் தந்த நம்பிக்கையுமே ஆகும்.அந்த மாதிரி மனிதர்கள்தான் அடுத்தவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகிறார்கள்.மற்றவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாவது என்பது சும்மா வருவதில்லை.மிகப் பெரிய பண்புகளில் தலையாய ஒன்று அது.உன்னை நம்புகிற கூட்டத்தையும் உன்னை நேசிக்கிற கூட்டத்தையும் சம்பாதிப்பது மிகவும் உயர்ந்தவை.
அதைப்போல நமக்கும் பல சமயங்களில் நாம் ஏன் இதை எடுத்துச் செய்யக்கூடாது என்று தோன்றும்படி  சில செயல்கள் நம் முன் நிற்கும். அந்ததருணங்களில் சிறிதுகூட அடுத்த சிந்தனைக்கு இடம் தராமல் நம்பிக்கை உள்ள ஒரு நல்ல செயலை ஈடுபாட்டுடன் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ந‌ம் பிள்ளைகளுக்கு வளர்த்து விட வேண்டும்.அடுத்தவர் செய்யட்டுமே என்று ஒரு கணம் தவற விட்டால் ஒரு வாய்ப்பை நாம் வாழ்வில் தவற விடுகிறோம் எனப்பொருள்.  

Posted in Uncategorized | 11 Comments »

அகில உலகப்பெண்கள் தினம்

Posted by kalyanakamala மேல் மார்ச் 8, 2008

அகில உலகப்பெண்கள் தினமான இன்று சாதாரணமாக குடும்பத்திலிருக்கும் பெண்களாகட்டும் மற்றும் பணி செய்யும் பெண்களாக இருக்கட்டும் என்ன செய்யலாம்?
                நம்ம கலாசாரத்தைக் கொஞ்சம் திரும்பிப்பார்க்கலாம்.
                அதில் பெண்களின் பொறுப்புக்கள் என்று சொல்லப்பட்டிருப்பதை ஒரு முறை சொல்லிப் பார்க்கலாம் அல்ல்லது மற்றொரு பெண் கிடைத்தால் விவாதிக்கலாம்.
               .
               நமது பெண்ணை அல்லது நமது சகோதரிகளை மற்ற பெண்களை மதிக்கச் சொல்லித் தரலாம். அவர்கள் வீட்டு ஆண்களையும் அவர்கள் மூலமே (சச்சரவின்றி)  பெண்ணை மதிக்கிறவர்களாக நடக்கச் செய்யலாம்.
       மற்றும் நமது அண்டைஅயல் வீட்டிலிருக்கும் பெண்களை நாம் மதிக்கிறோமா என்றும் ,அவர்கள் சுதந்திர‌த்தை நாம் தடை செய்யாமல் அனுமதிக்கிறோமா என்று சிந்திக்கலாம்.
           பெண்கள் முன்னெற்றத்தை தடை செய்யாத வகையில் ஆண்களை (முக்கியமாக நமது மகன்களை மற்றும் அண்ணன் தம்பிகளை)வாழ சொல்லிக்கொடுக்கலாம்.
          மற்ற நமக்குத்தெரிந்த நம்மை மதிக்கிற பெண்களையும் அவர்களின் வீட்டு ஆண்களை பெண்ணை மதிக்கிறவர்களாக வாழக்கற்று கொடுக்கச் சொல்லலாம்.

          நாம் பார்க்கிற ஆண்களிடம் சின்ன சின்ன செயல்கள் மூலம் நாமும் மதிப்பிற்குரியவர்கள்தான் என்று எண்ணும்படி நடந்து கொள்ளலாம்.
         . சந்திக்கிற  சாமன்ய பெண்களிடம் சில பல பெண் உரிமைகளை அவளுடைய குடும்பம் பாதிக்காத வகையில் நடை முறைப்படுத்த சொல்லித் தரலாம்.தனக்கென்று ஒரு சுற்று வட்டத்தையும் நண்ப‌ர்களையும் ஏற்படுத்திக்கொள்ளவும் சிறிய வேலை வாய்ப்புக்களையும் பற்றி விவாதிக்கலாம்.
           இது அவர்கள் குடும்பத்தில் குழப்பம் விளைவிக்காமல் இருப்பது மிக முக்கியம்.
        குடும்பம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அவர்களும் கண்ணும் கருத்துமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.அதை எடுத்துச்சொல்லி அவர்களுக்குப்புரிய வைக்க வெண்டும்.
   இந்தச் செயல்களை செய்யும்போது சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் ஒரு போதும் கை விடக்கூடாது என்ற முடிவோடு ஈடுபடவேண்டும்.
         

Posted in Uncategorized | 5 Comments »

ஓட்ஸோ ஓட்ஸ்!

Posted by kalyanakamala மேல் பிப்ரவரி 27, 2008

காலையுணவாக ஓட்ஸ் சாப்பிடுவது என்பது ஒரு கொள்கையாகவே ஆகி வரும் இன்னாட்களில் ஓட்ஸ் தயரிப்பதில் சில முறைகளைத் தெரிவிப்பது நல்லதாயிருக்கும் எனத் தோன்றியதன் விளைவு இந்தப்பதிவு.
ஓட்ஸை அப்படியே தண்ணீரில் கொதிக்க வைத்து பால் சர்க்கரை சேர்த்துச் சாப்பிடுவதும் ,சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவதும் பழக்கமாக உள்ளது.
ஓட்ஸை மிக்சியில் பொட்டு நன்றாகப்பொடி செய்து விட்டு அதை கொதிக்கவைத்து சாப்பிடுவது கொஞச‌ம் எளிமையாக இருக்கும். மொந்தையாக ஓட்ஸ் கூழ் ஆகாமல் இருக்க உதவும்.
ஓட்ஸை பொடி செய்து மொத்தமாக ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்துக்கொள்ளலாம்.
ஓட்ஸ் கூழ் தயாரித்த பின் அதில் மோர் விட்டு உப்பு போட்டும் சாப்பிடலாம். அல்லது அந்தக்கூழில் கொஞ்சம் ஒமம் போட்டு உப்பிட்டு சாப்பிட்டால் சிலருக்குப் பிடிக்கும்.
ஓட்ஸ் கூழ் த‌ய‌ரித்த‌பின் அதில் உப்பு செர்த்து கார‌ட், சிறிது கோஸ் பொன்ற‌ மெல்லிய‌ காய்க‌றிக‌ளை வ‌த‌க்கிப்போட்டால் ந‌ல்ல‌ காலையுண‌வு என்ப‌தில் சந்தேக‌மே இல்லை. ஆனால் காய்க‌றிக‌ள் அள‌வு கொஞ்ச‌மாக‌ இருக்க‌ வெண்டும். நிறைய காய்கறிகள்  போட்டால் இலேசாக‌ இல்லாம‌ல் heavy  ஆக‌ ஆகிவிடும்

Posted in Uncategorized | 17 Comments »

ஒரு தாயின் மரணம்……….

Posted by kalyanakamala மேல் பிப்ரவரி 13, 2008

மரணம் நம் சொந்த பந்தங்களை நம்மிடமிருந்து பிரிக்கிறது என்பதை மட்டும் நாம் நினைக்கிறோம். மரணத்தின் மறுபக்கம் என்ன?
நம் அன்புக்குறியவர்களை நம்மிடமிருந்து பிரிக்கும் மரணத்தின் மறுபக்கம் ஒன்று உள்ளது என்பது நாம் பலரும் அதிகம் யோசிக்காத ஒன்று.
 என் தாயின் மரணம் எனக்கு அதை மிக நன்றாகக்காட்டியது.

அதிகம் பேசாத மென்மையான (புதுமைப்பெண்களிடமிருந்து சுத்தமாக மாறுபட்ட)என் அன்புத்தாயின்  மரணம் போன சனி இரவு நிகழ்ந்தது.
இப்படிக்கூட இறக்க முடியுமா என்ரு தோன்றியது எனக்கு?

அவர் எங்கோ அடுத்த ஊருக்குப்போவது போல இருந்தது,தொலை தூரப்பயணம் போவது போலக்கூட இல்லை.

மரணத்தை ஆவலுடன் அணைத்துக் கொள்ள மனம் ஆசைப்படுமோ? என் அம்மாவின் மனம் ஆசைப்பட்டது.

அவ‌ர் இத‌ய‌ம் விரிவடைந்த‌வ‌ர்(heart enlargement)இர‌த்த‌ அழுத்த‌ம் உள்ள‌வ‌ர். ஆனால் ப‌ல‌கால‌மாக‌ இர‌த்த‌ அழுத்த‌மும் ,heart enlargement ம் இருந்து வந்த‌‌தால் மாத்திரைக‌ள் சாப்பிட்டு வந்தார்.
போன‌ மாத‌ம் முத‌ல் உட‌ல் நிலை ந‌ல‌ம் குறைய‌ ஆர‌ம்பித்து மிக‌ ப‌ல‌கீன‌மாக‌ இருந்தார்.

மிக‌ ப‌ல‌கீன‌மாக‌ ஆகி விட்ட‌பின் ந‌ட‌மாட்ட‌ம் குறைந்த‌‌து. உட‌ல் ந‌ல‌ம் குறைந்ததாலும் மனந‌‌ல‌ம் மிக்க‌வ‌ராக‌ இருந்தார்.தன் கண்ணையும் தானமாகக்கொடுக்கச் சொல்லி விட்டுப்போன எந்தாயின் மன திடத்தை எண்ணிஎண்ணி வியக்கிறேன்!

தன் பிள்ளைகளுக்குத் தொல்லை தராமல் தான் கடவுளிடம் போய்ச்சேர ஓயாமல் பிரார்த்திதார்.

மாலை நாலு மணியளவில் படுக்கையில் கையை ஊன்றி எழுந்தார்.கலைந்திருந்த கூந்தலை சரி செய்யச் சொன்னார்.புடவையைச்சீர் செய்து கொண்டார்.பக்கத்திலிருந்த எல்லா மகன் மகள்களையும் பார்த்தார்.அனைவரையும் பார்த்து ஒவ்வொருவராக அருகிலழைத்தார்.ஒவ்வொருவரின் தலையில் கையை வைத்து ஆசிர்வாதம் வழங்கினார்.வாயார வாழ்த்தினார்.மிகவும் களைப்பாக இருப்பதாகக் கூறிவிட்டு எவரும் அழக்கூடாது எனக்கூறினார்.
அதற்குப் பின் சரியாக ஒரு மணி நேரத்தில் சுவாசம் நின்றது.வலி என்றும் பிரிகிறோமே என்ற துன்பமென்றோ கொஞ்சம்கூடச் சொல்லவில்லை.எல்லொரும் தன்னால் துன்பப்படக்கூடாது என்றுமட்டும் நினைத்த என் தாயின் மரணம் என்னை உலுக்குகிறது.எங்கோ பக்கத்திலுள்ள ஊருக்குப்போவது போல எல்லொரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பிப்போன என் தாயைப்போல மரண பயமின்றி மரணத்தை ஆவலுடன் தழுவியவர்கள் எவரும் உண்டோ?

Posted in Uncategorized | 8 Comments »

அப்பாவா? அம்மாவா?

Posted by kalyanakamala மேல் ஜனவரி 29, 2008

ஐந்தாம் தேதி  பதினைந்து வருடங்களுக்கு முன் இறந்து போன என்னுடைய தந்தையின் நினைவு நாள். எனக்கு அன்றைக்கு எல்லா சிலவுகளையும் நானே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று ஒரு வேகம் மனதில். சில சடங்குகளைச்செய்வது வழக்கம்.தம்பி,தமயன் மற்றும் அவர்கள் மனைவியர் காரியங்களைச் செய்வார்கள். புரொகிதர்கள் வந்து சிலபல சாங்கியங்களைச் செய்து சாப்பாடு சாப்பிட்டு விட்டுப்போவார்கள்.. அப்பாவும் அவர் மூதாதையர்களும் அன்று வீட்டுக்கு  வருவதாக ஐதீகம். பெண் பிள்ளைகளுக்கு அண்ணன் தம்பிமார்கள் அழைப்பு விடுப்பார்கள் வந்து கலந்து கொள்ளச்சொல்லி. எனக்கு ஒரு எண்ணம் நாமும்தானெ பிறந்தோம் அந்த அப்பாவுக்கு ,ஏன் நாம் அப்படிச் சாப்பாடு போட்டு அந்தச் சடங்கை தனியாகச் செய்யக்கூடாது?
அம்மாவிடம் கேட்டேன்.அம்மாவுக்கு எண்பது வயது. எந்தப் பிள்ளையும் தன் பிள்ளைதான்.அம்மா சொன்னாள் ” நான் இருக்கும் வரை எல்லோரும் சேர்ந்தே செய்து விடுங்கள். தனித் தனியா போக வேண்டாம்”.அம்மா என்றொரு ஜீவன் எப்போதும் இணக்கும் சக்தியாகவே செயல்படுகிறது.”வேண்டுமானால் உன்னால் முடிந்ததை வாங்கிக் கொடேன் அப்பா என்ன வாய் திறந்தா கேட்கப் போகிறார்”.
  சரிதான் நம்மால் முடிந்ததை வாங்கி கொடுப்போம் அம்மா சொல்வதும் சரிதான்!
இரண்டு நாள் முன்பு அம்மாவுக்கு காலில் வலி வந்தது. மருந்துக்கு தன் கைப்பணத்தை எண்ணி எண்ணிக் கொடுத்தார்.மனதிலே ஒரு பொரி!செத்துப்போன அப்பாவுக்கு செய்ய ஆசைப்பட்டேன் இருக்கிற அம்மாவுக்கு நிறையவே செய்யலாமே. அதனால் அப்பாவுக்கு ஒரு ஆத்மா என்று ஒன்று இருந்தால் நிசமாகவே சந்தோஷப்படுமே என்று தோன்றியது.செய்து விட்டேன் இப்பொழுதே மனதும் கையும் நிறைய!
சரிதானே நண்பர்கள?

Posted in Uncategorized | 9 Comments »